Tuesday, September 14, 2010

கற்க கசடற

ஒரு பாட்டு கேள்விப் பட்டிருப்போம்.

"ஆவீன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமைசாக
மாவீரம் போகுதென்று விதைகொண்டோட
வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டொருவான் எதிரேபோக
தள்ளவொணா விருந்துவர சர்ப்பம்தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்க
குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"

(விவேக சிந்தாமணி?... மே பீ!)

எதுக்கு இம்புட்டு? பட்ட காலிலே படுமுன்னு சுருக்கமாச் சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே-ன்னு கேட்கறீங்களா? அப்புறம், எனக்கு இதெல்லாம் தெரியுமுன்னு எப்போத்தான் சொல்லிக் காட்டுறதாம்?

நம்ம தில்லிக்கு இப்போ நேரமே சரியில்லீங்க! ’ஏன்யா, காமன்வெல்த் விளையாட்டை நடத்தறதுக்கு முன்னாடி எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்குறதில்லையா?’ன்னு டாக்டருங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! இப்படியே போனா கடைசியிலே கரும்புஜூஸு, பானிபூரி விக்குறவனெல்லாம் கேள்விகேக்குற அளவுக்கு காமன்வெல்த் விளையாட்டு காமெடியாகிப் போச்சுதண்ணே! சினிமாவுலே இப்பல்லாம் போலீஸ்காரவுங்களை வச்சுத்தானே காமெடி பண்ணுறாங்க! அதே மாதிரி காமன்வெல்த் விளையாட்டுலேயும் போலீஸ்காரங்களை வச்சு ஒரு காமெடி பண்ணியிருக்காங்க! வடிவேலு காதுலே விழுந்தா அடுத்த படத்துலே போட்டு அடி தூள் பண்ணிடுவாரு!

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்; கெளவியைப் புடிச்சு மணையிலே வையி,’ன்னு எங்கூருப்பக்கத்துலே சொல்லுவாங்க! அதே மாதிரி இருக்குற சோலியெல்லாம் விட்டுப்புட்டு தில்லியிலே போலீஸ்காரவுங்களுக்கு இங்கிலீஷ் பேச பயிற்சி கொடுத்திருக்காங்களாம். பெருசா ஒண்ணுமில்லீங்கண்ணா! ’Good Morning’, ’Good Evening’ ’ ’May I help you?’ மாதிரி ரொம்ப சர்வசாதாரணமான இங்கீலீஷ் தான்! இதைச் சொல்லிக்கொடுக்க ரெண்டுவருசம்; முப்பது லட்ச ரூபாய் செலவு! (விலைவாசிக்கு ஏத்தா மாதிரி கமிஷனும் ஏறுமில்லே? )

ஆனா, இந்தப் பயிற்சிக்குப் போன ஒருத்தராலேயும் இன்னும் இங்கிலீஷ் பேச முடியலியாம். ’உங்களுக்காகச் செலவு பண்ணின முப்பது லட்ச ரூபாயையும் சம்பளத்துலே பிடிக்கப்போறோம்,’னு அரசாங்கம் மிரட்ட ஆரம்பிச்சிருச்சாம். அதைப் பத்தியெல்லாம் போலீஸ்காரங்க பெருசா கவலைப்பட மாட்டாங்க, முப்பது லட்சத்தை முப்பது நாளிலே வசூல் பண்ணிர மாட்டாங்களா என்ன? சாதாரணமாவா நினைச்சிட்டீங்க நம்ம ஆளுங்களை?

ஆனா, இப்படி இங்கிலீஷை, திர்லக்கேணி பார்த்தசாரதி கோவில்லே புளியோதரை விநியோகம் பண்ணுறா மாதிரி கொஞ்சூண்டு சொல்லிக் கொடுத்தா பெரிய பிரச்சினையாயிடுமுங்க! இப்படித்தான், நம்ம ஆளு ஒருத்தரு அமெரிக்கா போறயிலே ’யெஸ்,நோ,ஆல்ரைட்,’னு மூணே மூணு வார்த்தை மட்டும் படிச்சிட்டுப் போனாரு. அவரு நியூ யார்க்குலே இறங்கின மூகூர்த்தம், வெளியே ஒரு கொலை நடந்திருச்சி! நம்மூரு ஞாபகத்துலே இந்தாளு அங்கண போயி பப்பரக்கான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தாரா? போலீஸ்காரவுங்க வந்திட்டாங்க?

"Hey Indian, Are you the culprit?"

"YES"

"What? Are you crazy??"

"NO"

"OK.You are under arrest!"

"Alright"

அம்புட்டுத்தேன், நம்மாளைக் கொத்தா அள்ளிட்டுப் போயிட்டாங்க! இதுக்குத் தான் சொல்லுறது, அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு இங்கிலீஷ் பேசப்படாதுன்னு! படிக்கிறவங்களுக்கே இப்படீன்னா, பாடம் சொல்லிக்கொடுக்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு யோசியுங்கண்ணே!

நான் படிச்சதெல்லாம் முன்சிபல் பள்ளியோடத்துலே! அங்கே மூணாங்கிளாசிலே தான் இங்கிலீஷே ஆரம்பிச்சாங்க! எங்க வாத்தியாருக்கே இங்கிலீஷ் தெரியாது; இருந்தாலும் கவுரதைக்காக இங்கிலீஸுலே தான் பேசுவாரு! ஒரு நா வகுப்புலே நான் சேட்டை பண்ணினேனா, அவரு என்னை வெளியே போகச் சொல்லிட்டாரு! எப்படீங்கிறீங்களா? அவருக்கு ’கெட் அவுட்’ங்கிற ரெண்டு வார்த்தை மறந்திருச்சு! அதுனாலே அவரு என்னைப் பார்த்து ’Follow me!' ன்னு சொல்லிட்டு வகுப்பை விட்டு வெளியே போனாரு! நானும் அவரு பின்னாலேயே போக, அவரு பள்ளிக்கூடத்துக்கு வெளியே வந்து ரோட்டுலே நின்னாரு! பொறவு என்னைப் பார்த்து ’Dont follow me!' சொல்லிட்டு அவரு மட்டும் உள்ளே போயிட்டாரு! எக்ஸ்ட்ராவா எவ்வளவு விஷயம் பண்ண வேண்டி வந்திருச்சு பார்த்தீங்களா? அதுனாலே தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு; ’கற்க கசடற!

இதே வாத்தியாரு, ஒரு நா லீவு போட்டுட்டு, அவரோட சம்சாரத்தோட நெல்லை ஸ்ரீரத்னாவுலே படம் பார்க்க வந்திருந்தாரு. நாங்க கட் அடிச்சிட்டு அதே படத்தைப் பார்க்கப போயிருந்தோம். அவரு பார்த்திட்டாரு! எங்களுக்கு பயமாயிடுச்சு! இருக்காதா பின்னே? ஒருவாட்டி வகுப்புலே நாங்க வம்பளந்துக்கிட்டிருந்தோமுன்னு, கோபத்துலே, "Don't shout! If you shout I will dismiss the Headmaster!"ன்னு வார்னிங் பண்ணினவராச்சே!

அடுத்த நாள் வகுப்புக்கு வந்ததும் வராததுமா, எங்களை எழுப்பி நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டாரு! எப்படீங்கிறீங்களா...?

Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theatre

அட இவ்வளவு ஏன்? நம்ம ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு அமெரிக்கா போகறதுக்கு விசா கிடைக்காததுக்கு என்ன காரணம் தெரியுமா? தூதரகத்துலே ஐயாக்கண்ணு கிட்டே "நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க?"ன்னு ஆங்கிலத்துலே கேட்டிருக்காங்க! இவரும் பதிலுக்கு ’பசுவைக் கட்டிப் பால் கறக்கிறேன்,’ன்னு சொல்லியிருக்காரு; ஆங்கிலத்துலே! அதைக் கேட்டதும் இவரோட அப்ளிகேசனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களாம். ஏன்னா, பசுவைக் கட்டிப் பால் கறக்குறேங்குறேன்னு இங்கிலீஷ்லே சொல்லுறதுக்கு அவரு ’I am marrying cows and rotating milk,' ன்னு சொல்லிட்டாராம்.

ஆக, போலீஸ்காரங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறதுலே தப்பில்லே! ஆனா, அவங்களுக்குப் புரியுறா மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கணும். உதாரணமா....

A for Assault
B for Bail
C for Chargesheet
D for Danger
E for Encounter
F for F.I.R

இந்த மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தா, கண்டிப்பா அவங்க நல்லா படிச்சு, தில்லியோட மானத்தைக் காப்பாத்தியிருப்பாங்க! நம்ம என்கவுன்டர் ஏகாம்பரம் கூட தில்லி போலீஸ்லே தான் இருக்காராம். அவரு கிட்டே கேட்டேன்.

"அட என்னாத்தைச் சொல்ல? முத நாளே போற வழியிலே என் வண்டி ஒரு ஆட்டை அடிச்சிருச்சுன்னு லேட்டாப் போனேனா, அதுனாலே என்னை கிளாசுக்கே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க!"

"அதுக்கென்ன அண்ணே, விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே?"

"சொன்னேனே! I am sorry, my bike hitting a mutton-ன்னு சொன்னேன். அதுக்கப்புறமும் என்னை வெளியே போகச் சொல்லிட்டாங்க!"

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, தில்லியிலே எல்லாரும் இங்கிலீஷ் படிச்சா என்னை மாதிரி ஆளுங்களுக்கு சவுகரியமா இருக்கும். போன வருசம் தில்லி போயிருந்தேனா, கரோல்பாக்குலே ஸ்வெட்டர் வாங்கினேன். அவன் என்ன விலை என்ன சொன்னான்னு புரியலே; இருந்தாலும் இருநூறு ரூபாய்க்கு மேலே கொடுக்க விருப்பமில்லே! ஆனா பாருங்க, எனக்கு இந்தி எண்ணிக்கையிலே ’தஸ்’னா பத்துங்கிறது மட்டும்தான் தெரியும். அதை வச்சே அவன் கிட்டே பேரம் பேசினேன். எப்படி...?

தஸ்...ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்.ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்....ஊப்பர் தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...

ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க! எனக்கு ’தஸ்’ஸுக்குப் பதிலா ’ஏக்’(ஒன்று) மட்டும் தெரிஞ்சிருந்தா என்னாயிருக்கும்! அனேகமா இப்போ கூட கரோல்பாக்குலேயேதான் இருந்திருப்பேன்.

13 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வடை யாருக்கு சேட்டை?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பானிபூரிக்காரரைக் கேட்டா கேம்ஸ் வேண்டாம்ன்னு தான் சொல்வார்......
கேம்ஸ் விளையாட வரவங்களை வெளீய சாப்பிடாதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு நீ
கடையைப் போடாதேன்னு இல்ல மிரட்டறாங்க..

Anonymous said...

//யெஸ்,நோ,ஆல்ரைட்//

பேசாம உங்கள கூட போலீசுல சேத்திருக்கலாம்..

சிரிப்பு போலீஸ் தான் வந்துட்டாரோனு நெனச்சேன்.

ப.கந்தசாமி said...

நல்ல சேட்டை?

vasu balaji said...

தஸ் ஊப்பர் =)) த ஸ்+ஊப்பர் சேட்டை.

Chitra said...

த(ட்)ஸ் ... சூப்பர்!

velji said...

i am suffering from fever- லீவ் லெட்டர் படிச்சதுக்கே சலுயூட் போட்டவங்கள்ள நம்ம மாம்ஸ்ங்க!

Anonymous said...

யெஸ், நோ, ஆல்ரைட் ஜோக் சூப்பருங்க சேட்டை .

என்னது நானு யாரா? said...

சேடை! அருமையான சேட்டை!

நேரம் இருக்கும்போது நம்ப கடை பக்கம் வந்து போங்க!

பிரபாகர் said...

இங்லிபீஸ்ல சும்மா வெளுத்து வாங்குறீங்க! கலக்கல் சேட்டை!

பிரபாகர்...

Unknown said...

கலக்கல்..

suneel krishnan said...

சரியான சேட்டை ..
நம்ம ஊர்ல பல கல்வி தந்தைகளின் ஆங்கிலமும் இந்த அளவு தான்னு கேள்வி பட்டேன் ..
கதவை திற காற்று வரட்டும் - அதுக்கு - open the window let the atmosphere come in
மாடியில் நிற்கும் மாணவர்களை கீழே வர சொல்ல - all boys come to earth
இதெல்லாம் சாம்பிள் தான் .

ADHI VENKAT said...

சூப்பர் சேட்டை. DON’T FOLLOW ME ரொம்ப நல்லா இருந்தது.