Friday, February 5, 2010

தாய் சொல்லைத் தட்டாதே

அறுபதுகளிலே அம்மாவெல்லாம்
அறிவுரை சொல்லியதென்ன?-அவர்
ஆசைப்பட்டதும் என்ன?

அன்புள்ள மகனே குலத்தைப்பார்த்து
அழகாய்த் திருமணம் பண்ணு-நம்
அந்தஸ்தை நீ எண்ணு!

எழுபதுகளிலே வந்தது மாற்றம்
என்னத்தைச் சொன்னாள் தாயே-அவள்
ஏக்கத்தைக் கேட்பாய் நீயே!

குலம்வேறாயினும் பரவாயில்லை
குறிப்பாய் மதத்திலே பாரு-நம்
குடும்பத்தில் பெருமை சேரு

எண்பதும்வந்தது அன்னையின் ஆசை
மாற்றங்கண்டது மீண்டும்-அதை
எல்லோரும் உணர வேண்டும்

காசும்பணமும் இருக்குறபொண்ணைக்
காதல் பண்ணலாம் நீயே-இதைக்
கருத்திலே நீகொள்வாயே!

தொண்ணூறுகளில் மிகப்பெருமாற்றம்
தொடருது அம்மா விருப்பம்-அதில்
தோய்ந்திருக்கு புதுத்திருப்பம்

இந்தியநாட்டுப் பெண்ணாய்ப் பாரு
இல்லத்திலே விளக்கேற்ற-என்
இதயத்தை மகள்போல் தேற்ற

இரண்டாயிரமாம் ஆண்டும் வந்தது
இப்போ சொன்னா அன்னை-அவள்
இணக்கம் கேட்பது உன்னை

உன்னைக்காட்டிலும் வயதில்குறைந்த
ஒருதுணையை நீதேடு-பின்
உருப்படுமே நம் வீடு

அம்மாவெல்லாம் அண்மைக்காலமாய்
ஆசைப்படுறதைப் பாரு-அவர்
அச்சத்தில் தவிக்கின்றாரு

எவளானாலும் பரவாயில்லை
பொண்ணாயிருக்கணும் அவளே-அது
போதும் வேறில்லை கவலை

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) பயங்கரமான முன்னேற்றம்..

settaikkaran said...

// :) பயங்கரமான முன்னேற்றம்..//

ரொம்ப நன்றிங்க! இந்தப் பாட்டை யாருமே கண்டுக்கலியோன்னு குழம்பிட்டிருந்தேன். :-))

goma said...

படிப்படியாக முன்னேற்றப் பாதையில் ஓடுகிறதே....2020 எப்படி?