Thursday, February 4, 2010

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.03

ஒரு வழியா பாஸ்போர்ட், விசாவெல்லாம் திருநேலி மார்க்கெட்டுலே கிடைக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டு நம்ம ஐயாக்கண்ணு அண்ணாச்சி, யார் யாரையோ புடிச்சு பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணுனாரு. பாஸ்போர்ட் ஆஃபீஸுலே ஐயாக்கண்ணுவை நேரிலே வரச்சொல்லியிருந்தாங்க. அண்ணாச்சியும் போயிருந்தாக. ஆஃபீஸர் கேட்டாரு!

"ஐயா! ஆந்தைக்குளம் தான் உங்க சொந்த ஊரா?"

"இல்லீங்க," என்று பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "அது அரசாங்கத்துக்கு சொந்தமான ஊருங்க. எனக்கு சொந்தமா ஒரு வீடு, ஆறு எருமை, அஞ்சு ஆடு, நாலு கோழி, மூணு குஞ்சு, ரெண்டு முட்டை மட்டும் தானுங்க இருக்கு!"

ஆஃபீசருக்குப் ஆந்தைக்குளத்தின் மகிமை உடனே புரிந்து விட்டது. இருந்தாலும் கடமையாயிற்றே! கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா?

"மன்னிக்கணும் ஐயாக்கண்ணு சார்! உங்க ஊர்ப்பேரு நான் கேள்விப்பட்டதேயில்லை. அதான் கேக்கேன். உங்க ஊருலே யாராவது பெரிய ஆளுங்க இதுவரைக்கும் பொறந்திருக்காங்களா?"

"இல்லேண்ணே!" என்று மீண்டும் பட்டென்று பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "இதுவரைக்கும் குழந்தைங்கதான் பொறந்திருக்காங்க!"

அதற்கு மேலும் ஐயாக்கண்ணுவிடம் பேசினால், பெரியாஸ்பத்திரிக்குப் போக வேண்டி வந்து விடுமென்று தெரிந்ததால், அப்பொழுதே பாஸ்போர்ட் அளிக்க ஒப்புதல் அளித்துக் கையெழுத்துப்போட்டு விட்டு, அரைநாள் லீவு போட்டு அம்பாசமுத்திரத்துக்கு ஓடிவிட்டார்.

அடுத்து விசாவுக்கு விண்ணப்பித்தார் ஐயாக்கண்ணு. அது விஷயமாக நெல்லையைப் பிடித்து சென்னைக்குக் கிளம்பினார். எக்மோரில் அவரை வரவேற்க வந்திருந்தார் ஐயாக்கண்ணுவின் ஆப்த நண்பர் களக்காடு கருமுத்து.

"என்ன அண்ணாச்சி? கண்ணெல்லாம் செவந்து கெடக்கு? வண்டியிலே உறங்கலியோ?"ன்னு ரொம்ப கருசனத்தோட கேட்டாரு கருமுத்து.

"அத ஏமுலே கேக்கே? மேல் பர்த் தான் கிடைச்சுது; உருண்டு கீழே விழுந்துருவோமோண்ணு ராத்திரி பூராவும் உறங்காமலே இருந்தேன்," என்று ரொம்ப வெசனமாச் சொன்னாரு ஐயாக்கண்ணு.

"அட கீழே இருக்கிறவங்க கிட்டே சொல்லி பர்த்தை மாத்தியிருக்க வேண்டியது தானே?"ன்னு கருமுத்து கேட்டாரு.

"லேய், கீழே ஆளு இருந்திருந்தா கேட்டிருக்க மாட்டேனா? நான் வந்த பொட்டியே காலியாத் தாம்லே வந்தது?"ன்னு ஐயாக்கண்ணு ரொம்பவே வெறுத்துப்போயி சொன்னாரு.

இப்படியாகத் தானே இருவரும் எக்மோர் ரயில்நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அவர்களை ஒரு பிச்சைக்காரர் வழிமறித்து அண்ணாச்சியைப் பார்த்து கைகூப்பிப் பிச்சை கேட்டார்

"ஐயா தர்மப்பிரபு! தர்மம் பண்ணுங்கய்யா!"

என்ன தோன்றியதோ, ஐயாக்கண்ணு பத்து ரூபாயை பிச்சைக்காரனின் அலுமினியப்பாத்திரத்தில் போட்டார்.

"எதுக்குண்ணே பத்து ரூபா போட்டீங்க?" கருமுத்து வியந்தார்.

"முத முதலா என்னை ஒருத்தன் தர்மப்பிரபுண்ணு சொல்லிட்டாம்லே. கொடுக்கலேன்னா தப்பா எண்ணிற மாட்டானா?" ஐயாக்கண்ணுவின் கேள்வியில் நியாமிருப்பதை உணர்ந்தார் கருமுத்து.

"இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தாராள மனசு அண்ணாச்சி! போன வருசம் சன்னாசிக்கு அம்பதாயிரம் ரூபா பணம் கொடுத்தீங்களே! திருப்பிக் கொடுத்தானா?"

"அதை ஏம்லே கேக்கே? அவனுக்கு ஆபரேசன் பண்ணனுமுண்ணு வந்து கேட்டான். ஆபரேசனுக்குப் பொறவு அவனைக் கண்டு புடிக்கவே முடியாமப்போச்சில்லா?" என்று வேதனையுடன் கூறினார் ஐயாக்கண்ணு.

"ஏன் அண்ணாச்சி?" புரியாத கருமுத்து வினவினார்.

"லேய், அவன் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மூஞ்சியையே மாத்திக்கிட்டாம்லே! அவன் பக்கத்துலே வந்து நிண்ணாலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியல்லே!" என்று நொந்து போய்க் கூறினார் ஐயாக்கண்ணு.

(இன்னும் வரும்)

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ கீழே ஆளு இருந்திருந்தா கேட்டிருக்க மாட்டேனா? நான் வந்த பொட்டியே காலியாத் தாம்லே வந்தது?"//
அட ராமா..
இவரு பயங்கர ஃபேமஸாகிடுவார் போலயே..

settaikkaran said...

//அட ராமா..
இவரு பயங்கர ஃபேமஸாகிடுவார் போலயே..//

ரொம்ப நன்றிங்க....!
நீங்க பார்த்து டெல்லியிலே சொல்லி ஒரு அவார்டுக்கு ஏற்பாடு பண்ணிர மாட்டீங்களா....? :-)))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேட்டைக்காரன் அவர்களுக்கு ,
ப.மு.க மகளிர் அணித் தலைவர் எழுதும் மடல்..
"ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு" வைப் பற்றி உங்கள் ப்ளாக் மூலம்
அறிந்தேன்..

அவர் நடத்தையிலிருந்து, அவர் ஆந்தைக்குளதில் இருக்கவேண்டிய
ஆள் அல்ல என்பது தெரிகிறது....
அவரை உடனடியாக ப.மு.க -வில் சேர , உறுப்பினர் படிவம் அனுப்பியுள்ளேன்..
படிவத்தை நிரப்ப உதவவும்..
நன்றி....

இவன்
பட்டாபட்டி.
ப.மு.க-தற்காலிய மகளிர் அணித் தலைவர்

settaikkaran said...

// ப.மு.க மகளிர் அணித் தலைவர் எழுதும் மடல்..
"ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு" வைப் பற்றி உங்கள் ப்ளாக் மூலம்
அறிந்தேன்..

அவர் நடத்தையிலிருந்து, அவர் ஆந்தைக்குளதில் இருக்கவேண்டிய
ஆள் அல்ல என்பது தெரிகிறது....
அவரை உடனடியாக ப.மு.க -வில் சேர , உறுப்பினர் படிவம் அனுப்பியுள்ளேன்..
படிவத்தை நிரப்ப உதவவும்..
நன்றி....

இவன்
பட்டாபட்டி.
ப.மு.க-தற்காலிய மகளிர் அணித் தலைவர்//

ஆஹா! எனக்குக் கிடைக்காத பேறு ஐயாக்கண்ணுவுக்கா? அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் உங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்.:-)

பிரேமா மகள் said...

ஹலொ பாஸ். தமிழ்நாட்டில் ஒரு சர்தார்ஜியை அடையாளம் காட்டியதற்கு நன்றி..